search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை சிறுமி கொலை வழக்கு"

    கோவை சிறுமி கொலை வழக்கில் தொடர்ந்து வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இன்னும் ஓரிரு நாளில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என்றும் போலீஸ் அதிகாரி கூறினார். #GirlHarassment
    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி கொலை செய்தது.

    பிரேத பரிசோதனையில் சிறுமி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், மூச்சுத்திணறலால் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது. கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர், பிளஸ்-2 மாணவர், ஆட்டோ டிரைவர் உள்பட பலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஒரு வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவர் மீது சந்தேகம் வலுக்கவே போலீஸ் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தினர். எனினும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை.

    கடந்த 25-ந் தேதி இரவு மாயமான சிறுமி மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு வீட்டருகே பிணமாக கிடந்தார். அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணிக்குள் அவர் கொலை செய்யப்பட்டு, உடலை டி-சர்ட்டில் சுற்றி வீசி உள்ளனர். அந்த டி-சர்ட் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவ்வழக்கு தொடர்பாக தகவல் கிடைக்காததால், குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.

    பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் டி.எஸ்.பி. 94981-04407, இன்ஸ் பெக்டர் 9498173353, அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை 94431- 22744 எண்களில் தொடர்பு கொள்ளுமாறு துண்டு பிரசுரம் அச்சடித்து வினியோகம் செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே மாநில குழந்தைகள் ஆணைய உறுப்பினர் மோகன் நேற்று துடியலூர் வந்து விசாரணை நடத்தினார்.

    பின்னர் அவர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறுமி கொலை வழக்கு தொடர்பாக போலீசார், பள்ளி ஆசிரியர்கள், ஊர் மக்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வெள்ளிக்கிழமை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. முழு விவரம் தெரிய வந்த பிறகு அடுத்தக் கட்ட நகர்வுகள் இருக்கும்.

    சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளியூரை சேர்ந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் காவல்துறையினர் தற்போது பிடித்து விசாரணை நடத்தும் நபர்களாக இருக்கலாம் அல்லது வேறு நபர்களாகவும் இருக்கலாம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ சிறுமியின் பெயர், புகைப்படம் வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வழக்கு விசாரணை குறித்து தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சிறுமி கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை 60 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனினும் உறுதியாக எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தப்படுகிறது. தொடர்ந்து வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் குற்றவாளிகளை கைது செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GirlHarassment

    ×